தமிழ்

1.எல்லாம் நன்மைக்கே

 ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

 வழக்கம் போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

 அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.

 அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.

நீதி :
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.


2.குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

 ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

 அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக்கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

 அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன.

நீதி :
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்கலாம்.



3.கைமேல் பலன் கிடைத்தது

 அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

 ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்காய் போய் விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

 சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.



4.வல்லவர் யார்?

 ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது.

 மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்று விட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம் அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது.

 அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது.

 எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.




5.சிட்டுக்குருவியின் ஆசை

 இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

6.தூங்கு மூஞ்சி வாத்தியார்

 ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் மதியம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவார். மாணவர்கள் ஏன் வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக நினைத்து, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவேன் எனக் கூறுவார்.

 மாணவர்கள் அவர் சொல்வது பொய் என்று தெரிந்துகொண்டு வாத்தியாருக்கு பாடம் கற்றுத்தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் எதிர்பாராத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல நடித்தார்கள். மாணவர்களைப் பார்த்த வாத்தியார் அனைவரையும் எழுப்பி ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டுத் திட்டினார். மாணவர்கள் அனைவரும் உங்களைப் போல நாங்களும் கனவுலகில் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை. அதன்பின் தனது தவறினை உணர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார் வாத்தியார்.

நீதி :
செய்கிற வேலையை சரியாக செய்தல் வேண்டும்.



7.பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

 ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான்.

 இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

 நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.

 உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளது போய்விடும்.



8.புள்ளிமான்கள்

 ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணை பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தே தான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.

 எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.

 சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்து விட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன்.

 சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.

 இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப் பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லி விட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.



9.நண்பகல் தூக்கம்

 ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

 அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

 அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

 மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

 சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார்.

நீதி :
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.


10.இனிப்பைத் தின்ற எறும்பு

 அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.

 இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.

 மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.

 அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.

 குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.

 அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.

 எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.

 தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.

 சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.

 அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.

 இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.

 தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.

 தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.

 இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.

 தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.

நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது. 




11.உழைப்பின் பயன்

 ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

 பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது, இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :
உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.


12.முயற்சி செய்வோம்

 ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.

 ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.

நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

13.குறையா? நிறையா?

 ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

 பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது.

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.


14.இரண்டு தேவதைகள்!

 நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.

 அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.

 அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.

 அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.

 அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.

 அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.

 இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச். . . கீச். . . என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.

 தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.

 அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.

நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

15.சாகாத வரம்

 வையாபுரி பட்டினம் என்ற நகரத்தில் முத்து வியாபாரி மாணிக்கம் என்பவர் வாழ்ந்து வந்தார். மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் இருக்கும்.

 மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்தான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டனர்.

 மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று நினைத்து, சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் இறந்துவிட்டார்.

 ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டு அண்ணன் முத்துவை கொல்ல நினைத்தனர். ஒரு நாள் முத்து வெளிநாட்டிலிருந்து வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

 முத்து சரி என்றான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கும் போது தம்பிகள் அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்.

 என்ன நடந்தது? என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று வரமளித்தார் கடவுள்.

 முத்து வீட்டிற்கு வந்தான். ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். என்ன நடந்தது என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தைப் பற்றி கூறினான்.

 தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டு ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.

 அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தபோது, அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். உங்களுக்கு என்ன நடந்தது? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப்போட்டதாக கூறினர்.

 கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும் என்றான் ரத்தினம். நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும் என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 ஆண்டு என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.

 கடவுள் பார்த்து நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம் என்றார் கடவுள். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் இருவரும்.

 கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும் என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.

 இருவரும் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நீரில் மூழ்கி இருந்தனர். கடவுள் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமையம் ரத்தினமும், வைரமும் பிணமாக நீரில் மிதந்தனர்.

நீதி :
பேராசை உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை அடைவார்கள். 


16.காக்கா கதை

  முன் ஓர் ஊரில் ஒரு பாட்டி ஒரு மரத்தடியில் வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு காக்கா அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. வடையின் மணம் காக்காவின் மூக்கைத் துளைத்தது. எல்லாரும் வடையை வாங்கித் தின்றார்கள். காக்காவிற்கு வடை சாப்பிட மிகவும் ஆசை.

 பாட்டியிடம் காக்கா உனக்கு உதவியாக வேலை செய்கிறேன். ஒரு வடை தருவாயா? என்று கேட்டது. பாட்டி உன்னால் எனக்கு என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்டார்.

 அடுப்பு எரிக்கக் காய்ந்த சுள்ளிவிறகு கொண்டுவந்துக் கொடுக்கிறேன் என்றது காக்கா. பாட்டி சரி என்றார். காக்கா பறந்து சென்று காட்டில் கிடந்த விறகுக் குச்சிகளை வாயில் கவ்வி எடுத்து வந்தது. இதுபோல பல முறை சென்று விறகுக் குச்சிகளைக் குவித்தது. பாட்டி மகிழ்ந்து போனார்.

 இந்தா என்று ஒரு வடையை நீட்டினார் பாட்டி. காக்கா வடையை வாயில் கவ்விக் கொண்டு அதன் கூட்டிற்கு சென்றது.

 அந்தப் பக்கமாய் ஒரு நரி வந்தது. காக்கா வாயில் இருக்கும் வடையை நரி பார்த்து அந்த வடையைப் பறித்துக்கொள்ள நினைத்தது. உடனே அது காக்காவைப் புகழத் தொடங்கியது.

  காக்கா! ஆகா! எத்தனை அழகு நீ! உன் ஒருச்சாய்ந்த கண்ணும், கருகரு மேனியும். . . அடடா! அழகே அழகு! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே, உன் இனிமையான குரலில் ஒரு பாட்டுப் பாடேன் என்று இதமாய்க் கேட்டது.

 புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும், வாயில் இருந்த வடையை மறந்து, கா, கா. . . எனப் பாடியதும் வடை கீழே விழுந்தது. நரியும் வடையைக் கவ்விக்கொண்டு ஓடியே சென்றுவிட்டது. காக்கா ஏமாந்துவிட்டது.

நீதி :
ஏமாறுபர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

17.உதவியின் சிறப்பு

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம் :
 என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

கதை :
 ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.

 அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

 சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.

 ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

 அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

 முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.

 இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

 சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.

 இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

18.கடவுளின் சிறப்பு

குறள் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம் :
 தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

கதை :
 ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.

 ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார்.

 ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான்.

 விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார்.

 இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.

நீதி :
அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.


19.கதிர் செய்த செயல்

குறள் :
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

விளக்கம் :
 முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

கதை :
 பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

 அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

 வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை.

 ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

 பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

 ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

நீதி :
நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.

20.கல்வியே அழியாத செல்வம்

குறள் :
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் :
 கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.

கதை :
 கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

 இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.

 கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான்.

 இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

 ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

 ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.

நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

21.கிளியின் நட்பு

குறள் :
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம் :
 நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

கதை :
 வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.

 அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

 அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

 கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

 இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

22.குரங்கின் தந்திரம்

குறள் :
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

விளக்கம் :
 பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

கதை :
 ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது.

 ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

 நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது.

 முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

 சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது.

 முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது.

நீதி :
நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.
 

Comments

Popular posts from this blog

What is Web Hosting And Types Of Webhosting

Cloud computing Service Models

DuckDuckGo Privacy Search Engine